வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அரசின் புதிய நிவாரணம்
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானம் வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருப்பின், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டபோது அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டனர்.

அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலும், பிரதி அமைச்சர் நாமல் சுதர்சனவின் பங்கேற்புடனும் அண்மையில் நாடாளுமன்றத்தில் இந்தக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடு செல்வதால் சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகள் குறித்து தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு, முன்னதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது மேலாளருக்கு ஆலோசனைக் குழு வழங்கியிருந்த அறிவுறுத்தல்களின் முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதன்போது, வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த மாதாந்திர கொடுப்பனவு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.