நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் அரசாங்கம் மின்சார கட்டணத்தை 32 சதவீதத்தால் அதிகரிக்கப்போவதாக சஜித் பிரேமதாச கூறிவந்த போதும், தற்போது மின்கட்டணத்தை 18.3 சதவீதத்தால் மாத்திரமே அதிகரிக்கவிருப்பதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.