மட்டக்குளி விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்
மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை 7 ஆம் இலக்க போக்குவரத்து பிரிவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு இடமம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

காரொன்று பல வாகனங்களுடன் மோதி விபத்து
காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை அடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.