தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; ரயில் நிலைய நுழைவாயிலுக்கு பூட்டு
சில ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் காரணமாக, இன்று காலை நுகேகொட ரயில் நிலையத்தின் வெளியேறும் கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் அவிசாவளையில் இருந்து கோட்டை நோக்கி இயக்கப்பட்ட ரயிலில் நுகேகொட வந்தடைந்த பயணிகளால் ரயில் நிலையத்திலிருந்து வெளியேற முடியாமல் போய், கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, ரயிலில் வந்த பயணிகள் ரயில் தளத்திலிருந்து தண்டவாளத்தில் இறங்கி, தண்டவாள வழியே நடந்து சென்று ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிய காட்சிகளைக் காண முடிந்தது.
ரயிலில் வந்த முதிய பெண்களால் ரயில் தளத்திலிருந்து தண்டவாளத்திற்கு இறங்க முடியவில்லை என்பதால், அவர்கள் கடும் அவதிக்குள்ளானதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
சில ரயில் நிலையங்களில் ஊழியர்கள் இல்லாவிட்டாலும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கவில்லை என்றும், நுகேகொட ரயில் நிலையத்தில் மட்டுமே வெளியேறும் கதவு மூடப்பட்டிருந்தது கடுமையான தவறு என்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.