17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மனுக்கு குடமுழுக்கு; முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு பெருவிழா இன்று இடம்பெற்றது. மீனாட்சி அம்மனின் குடமுழுக்கு விழாவால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
மீனாட்சி அம்மன் குடமுழுக்கு தொடர்பில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்,

முதலமைச்சர் விஜய் வாழ்த்து
“ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பொக்கிஷமாகத் திகழும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயக் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.
அன்னை மீனாட்சி மற்றும் சொக்கநாதரின் அருளால் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும், பெருமகிழ்ச்சியும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
லண்டன் அரசு முறைப் பயணம் மற்றும் பிற பாதுகாப்பு காரணங்களால் நேரடியாக விழாவில் பங்கேற்க இயலாவிட்டாலும், முதல்வர் தவெக அரசு சார்பில் அனைத்துத் துறை ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளையும் தங்குதடையின்றிச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு பெருவிழா தொடர்பில் அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் , மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவது ஆன்மிகப் பெருமை மட்டுமல்ல நமது திருக்கோயில் தமிழர் மரபின் தொடர்ச்சியை போற்றும் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும், இவ்விழாவை சிறப்பான ஏற்பாடுகளுடன் வெகு விமரிசையாக நடத்துவதற்கு பெரும் துணையாக அமைந்துள்ளது.
மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் அருளால் தமிழ்நாடு மக்கள் அனைவரும் அமைதி, ஆரோக்கியம், வளம் மற்றும் மகிழ்வுடன் வாழ வேண்டுகிறேன்.
நமது கோயில்களின் சிறப்பையும் தொன்மையையும் போற்றி, அவற்றை அடுத்த தலைமுறைக்கும் பெருமையுடன் கொண்டு செல்வோம் எனவும் அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிவிட்டுள்ளார் .