அவசரமாக இடமாற்றப்படும் கைதிகள் ; அநுராதபுரம் சிறைச்சாலையின் பல பகுதிகள் சேதம்
கடுமையான மழை காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சில கைதிகளை அவசர நடவடிக்கையாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை சிறைச்சாலைகளுக்கு மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையின் பாதுகாப்பு
சிறைச்சாலையின் பாதுகாப்பையும் கைதிகளின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
வெள்ளநீர் சிறைச்சாலைக்குள் நுழைந்து பல பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் தொடர்கின்றன.