ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது கட்டாயம் ; புதிய விதிமுறை அறிமுகம்
இலங்கையில் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது ஏற்றுமதி வருமானத்தில் எஞ்சியிருக்கும் தொகையை அடுத்த மாதத்தின் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வருமானத்தின் வெளிநாட்டு நாணயப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், உள்நாட்டு நாணயப் புழக்கத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய விதிமுறைகளுக்கு அமைய, அனுமதிக்கப்பட்ட செலவுகள் மற்றும் கொடுப்பனவுகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் ஏற்றுமதி வருமானம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.