யாழில் கத்திக்குத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ரகு துஷ்யந்தன் (39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், துஷ்யந்தன் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ரகு துஷ்யந்தன் நேற்று (27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.