வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை ; அரசாங்கம் தீவிர பரிசீலனை
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் நடைமுறைகள் குறித்து அமைச்சரவை ஆராய்ந்து வருகிறது.
வெளிநாட்டு இலங்கைத் தூதரகங்களில் நேரில் வாக்களிக்கும் முறை அல்லது டிஜிட்டல் முறையில் வாக்களிக்கும் முறை உள்ளிட்ட யோசனைகள் அமைச்சரவை உபகுழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செயல்முறையில் எவரும் புறக்கணிக்கப்படாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய வாக்களிப்பு முறைமையை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனுடன், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும், தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தெளிவின்மை காரணமாக இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தெரிவுக்குழுவின் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், அரசாங்கம் முடிவெடுப்பதற்காக மேலதிக கால அவகாசம் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பழைய விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதுடன், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான போதிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இவ்விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூட்டம் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.