திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய 27 வயது இளைஞர்
இந்தியா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
பொலிஸ் விசாரணையின்படி, குறித்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் நெருக்கமாக பழகியதாகவும், பின்னர் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மாணவி கர்ப்பமடைந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த இளைஞருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, குறித்த 27 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.