பிக் பாஸ் மேடையில் தொடங்கிய சர்ச்சை ; அரசியல் களத்தில் வெடித்த மோதல்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகரும் தொகுப்பாளருமான விஜய் சேதுபதி, தலைமைத்துவம் தொடர்பாக தெரிவித்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவரிடம் தலைமைத்துவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, பிரச்சினைகள் வரும்போது களத்தை விட்டு விலகுவது ஒரு தலைவருக்கு அழகல்ல என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பேச்சு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து விஜய் சேதுபதிக்கு எதிராக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதற்கு விளக்கமளித்த விஜய் தொலைக்காட்சி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் நிகழ்ச்சியின் கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்குள் நடைபெறுபவை என்றும், அவற்றை நிகழ்ச்சிக்கு வெளியிலுள்ள தனிநபர், அமைப்பு அல்லது அரசியல் சூழலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதி திமுகவைச் சேர்ந்தவர் என குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு தனியார் நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக அரசியல் தலைவர்களை பயன்படுத்துவது தவறானது என்றும், அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியை விமர்சித்த விஜய் சேதுபதி, பின்னர் திமுக ஆட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த ஆட்சியைப் பாராட்டிப் பேசியதாகவும் மோகன் ஜி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தவெக ஆட்சியை விமர்சிப்பதன் மூலம் விஜய் சேதுபதியின் அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் மத்தியில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இவை அனைத்தும் மோகன் ஜி முன்வைத்த அரசியல் குற்றச்சாட்டுகளாகும். இதனிடையே, விஜய் சேதுபதியின் பிக் பாஸ் பேச்சு தொடர்பான சர்ச்சை தொடர்ந்து அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் மற்றும் திரைத்துறை சார்ந்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.