பாதாள குழுவினருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியவர் கைது
பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் "போம்புவல சுத்தா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட சந்திப் பகுதியில் உள்ள கடையொன்றின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளிகள் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
பின்னர் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், போம்புவல பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது, குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகட்டில் பதிவு இலக்கங்கள் மாறுபடும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளின் போது, இவர் இங்கிரிய, இரத்தினபுரி மற்றும் கிரியெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களுக்காக பாதாள உலகக் குழுக்களுக்கு வழங்குவதற்கு இவர் செயற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.