மன்னார் உணவகங்களில் அரங்கேறும் செயல் ; விசேட பரிசோதனையால் அம்பலமான விடயம்
மன்னார் நகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் ஐந்து உணவு விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுகாதாரப் பரிசோதனையின்போது, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக விழிப்புணர்வுக் கூட்டங்களும் அறிவுறுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், சில உணவு விற்பனை நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

விசேட பரிசோதனை
மன்னார் நகர சபையின் பொது சுகாதாரப் பரிசோதகரால் குறித்த ஐந்து உணவு விற்பனை நிலையங்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, சில உணவு விற்பனை நிலையங்கள் உரிய வர்த்தக அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கியமை, உணவைக் கையாளும் பணியாளர்களிடம் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் உணவு தயாரிக்கும் இடங்கள் போதிய சுத்தமின்றிக் காணப்பட்டமை உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், உணவுப் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததுடன், ஈக்கள் மற்றும் ஏனைய பூச்சிகளால் உணவுகள் மாசுபடக்கூடிய சூழலும் காணப்பட்டுள்ளது.
இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம் ; தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான சம்பவம்
அத்துடன், சமைக்கப்படாத உணவுகளையும் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தனித்தனியாகச் சேமிக்காமை, சமையல் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை உரிய முறையில் சுத்தம் செய்து பராமரிக்காமை போன்ற குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, கழிவுகள் மற்றும் கழிவுநீரை முறையாக அகற்றாமை, உணவுப் பாதுகாப்பு தொடர்பான பதிவுகள் மற்றும் சட்டரீதியான நடைமுறைகளைப் பேணாமை உள்ளிட்ட பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளும் பரிசோதனையின்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.