நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பாதாள உலக குழுவினருக்கு உதவி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2 வருடங்களாக டுபாயில் தலைமறைவாகியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தனது கடமை நேரத் துப்பாக்கியை பாதாள உலக குழுவினருக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.அவர் விசாரணைகளின் போது பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சிவப்பு பிடியாணை
அநுராதபுரம், பேமடுவ, ஹெலம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ஜயகொடி ஆராச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயகொடி என்ற கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர் டுபாயில் வாழ்ந்த வாழ்க்கை தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அங்கு அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றை விலைக்கு வாங்கி அதனைப் பகுதிகளாகப் பிரித்துப் பல்வேறு நபர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக அந்நாட்டிலுள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பகுதிநேர வேலையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தான் வழங்கிய கடமை நேரத் துப்பாக்கி தொடர்பில் அவர் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
குறித்த கான்ஸ்டபிள் கல்கிசை பொலிஸ் பிரிவின் வீதித் தடையொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் காணாமல் போயிருந்தார்.
அவர் தனது டி-56 ரக கடமை நேரத் துப்பாக்கியை டுபாயில் தலைமறைவாகியுள்ள 'இஹல கெமுனுகே தர்ஷன' அல்லது 'ஐடி' என அழைக்கப்படுபவரின் நெருங்கிய சகா ஒருவரிடம் வழங்கிவிட்டு டுபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த துப்பாக்கி பொலிஸாரhல் மீட்கப்பட்டதுடன் இந்நாட்டுப் பொலிஸாரினால் சர்வதேச பொலிஸார் (Interpol)ஊடாக சந்தேகநபருக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கiமைய கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி உறவினர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக டுபாய் விமான நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்து நாட்டுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.