வலி வடக்கில் கடற்படை காணி சுவீகரிப்பு ; ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கடற்படை இல்லையா?
மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் செயற்பாடு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவர்களாக கடற்படை உள்ளார்களா அல்லது ஜனாதிபதி யாழ்ப்பாண மக்களை ஏமாற்றுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறாரா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் அதனை எமது அரசாங்கம் செயற்படுத்தும் என வாக்குறுதி வழங்கி இருந்தார்.
ஆனால் இந்த அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் மிகக் குறுகிய ஏக்கர் காணிகளை மட்டும் விடுவித்தமை அவர்களும் கடந்த அரசாங்கங்களைப் போல வாக்குகளை பெறுவதற்காக தமிழ் மக்களை ஏமாற்றிய நாடகமாகவே பார்க்க முடிகிறது.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்றும் தமது பூர்வீக நிலங்களுக்குள் மக்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.
அண்மையில் ஜனாதிபதி செயலகம் முன் வலி வடக்கு மீள்குடியேற்ற அமைப்பினர் மக்களை ஒன்று திரட்டி தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தை நடத்திய நிலையிலும் தற்போது கடற்படை தமது தேவைக்காக தனியார் காணியை அபகரிக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.
இந்த நாட்டின் அதிகாரம் மிக்க முப்படைகளையும் கட்டுப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இருக்கின்ற நிலையில் அவரின் வாக்குறுதிகளை மீறி கடற்படை காணி பிடிப்பில் ஈடுபடுகிறதா .வலி வடக்கு தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் புதிய கட்டுமானங்களை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. ஆகவே தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.
பெளத்த சிங்கள பேரினவாத அரசாங்கம் என்றைக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வராது என அவர் மேலும் தெரிவித்தார்.