நாட்டை கட்டியெழுப்ப சட்ட ஆட்சி அவசியம் ; ஜனாதிபதி அநுர உறுதி
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று (11) பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பிரஜையொருவருக்கு அநீதி நடந்தால் அவர் எங்கு செல்ல வேண்டும். அவர் காவல்துறைக்கு செல்வார். தனக்கு நடந்த அநீதிக்கு அவர் நீதியை எதிர்பார்ப்பார்.
அவர் நீதிமன்றத்தை நாடுவார். அநீதிக்கு நீதியை எதிர்பார்ப்பார். அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் இது மிகவும் அத்தியாவசியமானது.
எனவே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம். சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சட்டம் சிலந்திவலையைப் போன்றது என்பார்கள்.
சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும் பெரியவை தப்பித்துக் கொள்ளும் என்பார்கள்.இவ்வாறு தான் பொதுமக்கள் மத்தியில் சட்டம் தொடர்பான நம்பிக்கை காணப்படுகிறது.
ஆனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.