லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மனு ; உயர்நீதிமன்றத்தில் புதிய உத்தரவு
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு செப்டம்பர் 07ஆம் திகதிக்கு மீண்டும் அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், மனுவை எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
மனுதாரரான முன்னாள் அமைச்சர், தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கை முன்னெடுக்க முடியாது என தமது சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகள் மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த தீர்மானம் சட்டத்துக்கு முரணானது எனக் கூறி, தமக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அவர் உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.