யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டப விவகாரம் ; அரசாங்கம் மீது கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் புத்தசாசன அமைச்சின் நம்பிக்கை பொறுப்பு சபைக்குள் உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுக்கு தனித்துவமான கலாசார அடையாளம் இருக்கக்கூடாது என்ற பேரினவாத சிந்தனையே இதற்குப் பின்னணியாக இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் கலாசார அடையாளமாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை புத்தசாசன அமைச்சின் கீழ் கொண்டு வந்தமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் கலாசார மற்றும் மத அடையாளங்களை அழிக்கவும் மாற்றியமைக்கவும் புத்தசாசன அமைச்சு முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை அந்த அமைச்சின் கீழ் கொண்டு வந்திருப்பது திட்டமிட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், முந்தைய அரசாங்கங்களை விட மோசமான முறையில் தமிழர் அடையாளங்களை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.