ஆபத்தான பொருளுடன் இந்தியப் புவியியலாளர் இலங்கையில் கைது
போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர், இன்ர்உ (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 60 வயதுடைய இந்தியப் புவியியலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொகெய்ன்
விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள, எதனையும் அறிவிப்பதற்கில்லாத "பச்சை வழித்தடத்தின்" (Green Channel) ஊடாக போதைப்பொருளைக் கடத்திச் செல்ல முயன்றபோதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
சந்தேக நபர் உகாண்டாவின் கம்பாலா நகரிலிருந்து இந்தப் போதைப்பொருளைப் பெற்றுக்கொண்டு, கட்டார் நாட்டின் தோஹா நகரை வந்தடைந்துள்ளார். அங்கிருந்து கட்டார் ஏர்வேஸின் QR-664 என்ற விமானம் மூலம் வௌ்ளிக்கிழமை(15) காலை 10.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.

அவரது பயணப்பொதியில் இருந்த இரண்டு சான்றிதழ் கோப்புகளுக்குள் (Files), மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 கிலோ 150 கிராம் கொகெய்ன் போதைப்பொருள் இதன்போது கண்டெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக, கைது செய்யப்பட்ட பயணி மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.