கிளிநொச்சி நகைக்கடை உரிமையாளரை கடத்தியவர் யாழில் சிக்கினார்
கிளிநொச்சி, நகரிலுள்ள நகைக்கடை ஒன்றின் உரிமையாளரை கடத்திய வாகனத்தின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கோப்பாய் பகுதியில் வீட்டில் தங்கியிருந்த போது நேற்று(15) மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்று(16) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சம்பவம் தொடர்பான மேலும் 4 சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி நகரிலுள்ள நகைக்கடை உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி இரவு கடத்தப்பட்ட நகைக்கடையில் இருந்த நகைகளும் சந்தேகநபரால் திருடப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 14 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நகைக்கடை உரிமையாளர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.