கண்ணகி அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்!
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கீழே விழுந்ததில் கால்கள் முறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
நேற்றைய தினம் (23-04-2024) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, அம்மனுக்கு பூக்கள் தூவுவதற்காக மணிமண்டபத்தில் ஏறியுள்ளார். 2வது முறை ஏறிய போது வேட்டி அப்பகுதியில் மாட்டியதால் தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
அங்கு நின்றவர்கள் படுகாயமடைந்தவரை உடனடியாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு தனியார் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
வைத்தியசாலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், இவரின் வலது காலில் வெடிப்பும் இடது கால் முறிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்புவதில் அங்கு நின்றவர்கள் அக்கறை காட்டவில்லை என சில தவறான தகவல்கள் வெளியாகி இருந்தது.
இது குறித்து செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்ட நபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த தகவல் தவறானது எனவும், அங்கு இந்த சம்பவத்தை பார்த்த அனைவரும் தனக்கு உதவியதாகவும், அவர்களே தன்னை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபருக்கும் குடும்பத்துக்கும் உதவ செய்ய சில புலம்பெயர் தமிழர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.