வெள்ளத்தால் ஆபத்தில் தலதா மாளிகை!
கண்டி உடவத்த வன பிரதேசத்திலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஸ்ரீ தலதா மாளிகை, ஆளுநர் அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் இது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
வடிகால் அமைப்புகளை பராமரிக்க வேண்டும்
கண்டி மாவட்ட செயலகத்தில் கடந்த வியாழனன்று (18) நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆளுநர் மேற்படி விடயத்தை தெரிவித்தார்.
கண்டி, உடவத்தை காட்டில் இருந்து நீர் வெளியேறும் பழைய வடிகால் அமைப்புகள் பராமரிக்காமையே இதற்கு ஒரு காரணம் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
உடவத்தை வனப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகால் அமைப்புகளை வனவள திணைக்களம் பராமரிக்க வேண்டும் எனவும், அத்துடன் நீர் செல்லும் ஏனைய வடிகால் அமைப்புகளை பராமரிப்பதற்கும் கண்டி மாநகர சபை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.