தையிட்டி விகாராதிபதி - யாழ். மாவட்ட செயலர் சந்திப்பு
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
கடந்த 31ஆம் திகதி தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக தையிட்டி விகாரதிபதியை இன்றைய தினம் சந்தித்ததாக மாவட்ட செயலர் தெரிவித்தார்.

நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி
அதேவேளை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாக தீப விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் , திஸ்ஸ விகாரை முன்னர் இருந்த இடத்தினையும் , திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.