மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு ; மாணவிகள் உட்பட மூவர் கைது
இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி தங்க நகைகள் பறித்துச் சென்ற வழக்கில், இரு கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம்பெற்றது.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தண்ணீர் கேட்டு வந்த மூவர், அவர் வீட்டிற்குள் சென்றபோது பின்தொடர்ந்து சென்று கண்களில் மிளகாய்ப்பொடி தூவி தாக்கியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த மூதாட்டியிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சாயல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் இரண்டு கல்லூரி மாணவிகளும் ஒரு இளைஞரும் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து தூத்துக்குடியில் பதுங்கியிருந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் அடகு வைத்திருந்த நகைகள் அடகுக் கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.