எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் வறட்சி தீவிரமடையலாம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த எல் நினோ தாக்கத்தின் விளைவுகள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சக்திவாய்ந்த எல் நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மழைவீழ்ச்சி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எல் நினோ நிலைமை உருவாகும் பட்சத்தில் நாட்டின் நீர்வளம், விவசாயம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் அதன் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எதிர்கால காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.