யாழ்ப்பாண மாணவி வித்தியா படுகொலை வழக்கு; விசாரணைக்கு திகதி குறித்த நீதிமன்றம்
யாழ்ப்பாணம் சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யாழ்.மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிப்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்தது.
தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது என குறித்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில் உள்ளதாக பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதிவாதிகள் இருவர் விடுவிப்பு
இந்நிலையில் வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்கின் பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக உள்ளதாக தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல், யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை மேல்முறையீட்டு-பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தது.
அதோடு இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 20 ஆம் திகதி மேற்கொள்ள நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
2015ஆம் ஆண்டு கூட்டுவன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு ஈவிரக்கமின்ற மாணை வித்தியா கஒலை செய்யப்பட்ட சம்பவம் ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.