இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமொன்றில் ஏற்பட்டுள்ள சிக்கல் ; வெளியான தகவல்
டிட்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட அதிதீவிர வானிலை காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்த தெமோதர'ஒன்பது வளைவு' பாலம் அமைந்துள்ள பகுதி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் புதிய சுற்றுலா வலையமைப்பொன்றை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக அங்கு நிர்மாணிக்கப்பட்டு வந்த சில கட்டிடங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் குரே தெரிவித்துள்ளார்.

நிர்மாணப் பணிகள்
ஒன்பது வளைவுப் பாலத்தை மின் ஒளியூட்டல் மற்றும் புதிய சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், சுமார் 300 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம், இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் கட்டிடச் சேதங்கள் காரணமாக, நிர்மாணப் பணிகளைத் திட்டமிட்டபடி நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தத் திட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாதிப்புகளைச் சீர்செய்து, பணிகளை விரைவுபடுத்தி அடுத்த ஆண்டில் (2026) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக இதனைத் திறந்து வைக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.