விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட காட்டுயானை ; தீவிரமாகும் விசாரணைகள்
காட்டு யானை ஒன்று எரியூட்டப்படும் காட்சிகள் அடங்கிய காணொளி தொடர்பில் அநுராதபுர வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மிகிந்தலை, சீப்புகுளம, அம்பகஹவெல பகுதியில் வைத்து இந்த காட்டு யானை எரியூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான அறிக்கை, நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானையை எரித்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேகநபரைக் கைது செய்வதற்காக, அநுராதபுர வலய வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர், இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில், எரியூட்டப்பட்டு கொல்லப்பட்ட குறித்த யானை சுமார் 50 முதல் 55 வயதுடைய ஆண் யானை எனவும், 9 அடி உயரமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த யானை, ஏற்கனவே இடது முன்னங்காலில் துப்பாக்கிச் சூட்டு காயத்துக்கு உள்ளாகியிருந்ததாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காகப் பன்டுலகம கால்நடை மருத்துவ அதிகாரிகளால் கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.