சீரமைக்கப்பட்ட நாயாறு பிரதான பாலம் ; வழமைக்கு திரும்பிய போக்குவரத்து
அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக உருவான பாரிய வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலம் முழுமையாகத் தகர்ந்து போயிருந்த நிலையில், இலங்கை இராணுவப் பொறியியலாளர்கள் அதனை வெற்றிகரமாகப் புனரமைத்து போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.
இந்தப் பாலம் உடைந்ததன் காரணமாக முல்லைத்தீவு - வெலிஓயா, முல்லைத்தீவு - திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு - கொக்கிளாய் ஆகிய பிரதான வீதிகளூடான வாகனப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.

தற்காலிகப் பாலம்
இதனால் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், இலங்கை இராணுவப் பொறியியலாளர் படையினர் அவசர திருத்தப் பணிகளை முன்னெடுத்து, தற்காலிகப் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 120 அடி நீளம் கொண்ட 'Compact 100' ரக கனரகப் பாலம் அங்கு பொருத்தப்பட்டுள்ளது. 12 பகுதிகளைக் கொண்ட இந்தப் பாலம் இருவழிப் போக்குவரத்திற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் முக்கிய போக்குவரத்துப் பாதையாக விளங்கும் இப்பகுதியில், இராணுவத்தினர் மேற்கொண்ட இந்தத் துரித தலையீடு காரணமாக மக்களின் நடமாட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், அப்பகுதி மக்களுக்கு இது பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.