இலங்கையில் எரிபொருளின் விலை திடீரென அதிகரிக்க இதுதான் காரணம் ; வெளியானது தகவல்
ஒரே தடவையில் எரிபொருள் விலை உயர்வு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை
முன்னைய மாதங்களின் எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது. நாட்டில் 30 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
இருந்தபோதிலும், இலங்கைக்கு வருகைதரவுள்ள எண்ணெய் கப்பல்களில் உள்ள எண்ணெய் விலை சடுதியாக உயர்வடைந்து வருகிறது.
எனவே, ஒரே தடவையில் பாரியளவில் விலை அதிகரிப்பை தவிர்ப்பதற்காகவே, எரிபொருட்களின் விலையை குறைந்தது 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்தநிலையில், கையிருப்பிலுள்ள எரிபொருளை எதிர்வரும் மாதங்களுக்காக விநியோகித்து விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்பார்க்கிறது. எனவே, தேவைக்கு மேலதிக எரிபொருளை சேமித்து வைப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
எனினும், மசகு எண்ணெய் விலை விரைவில் குறைவடையுமாயின் மாத இறுதிக்கு முன்னரே விலையை குறைக்க முடியும் எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.