இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,912,233 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் வருகை
அத்துடன், நவம்பர் 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையிலான முதல் எட்டு நாட்களில் மட்டும் 49,929 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதன்படி, இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 512,026 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதற்கடுத்தபடியாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து 176,670 பயணிகளும், சீனாவிலிருந்து 126,326 பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 108,754 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும், நவம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் பதிவான வருகையிலும் இந்தியாவே முன்னிலையில் உள்ளதுடன், அக்காலப்பகுதியில் 12,401 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.