யாழ் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம்
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் குழுவினர் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சென்ற அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்,
நேரில் சென்று பார்வை
யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மனாடா யஹம்பத் உள்ளிட்ட குழுவினரே மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அந்த காணியின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அங்கு மைதானம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது குறித்தும் இதன்போது பேசப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய மைதானத்தின் கட்டுமானத்துக்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளை சனத் ஜயசூரிய, இது தொடர்பாக இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தியும் பங்கேற்றிருந்தார்.