இடுகாட்டுக்கு செல்லும் வழியில் அரங்கேறிய சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை
நோர்வூட் இடுகாட்டுப் பகுதிக்குச் செல்லும் வீதியை முழுமையாகச் சேதப்படுத்திவிட்டு, சட்டவிரோதமாக மாணிக்கம் வெட்டி வந்த கும்பல் ஒன்றைக் கைது செய்வதற்காகச் சென்ற விசேட பொலிஸ் குழுவின் முயற்சி தோல்வியடைந்துள்ளது.
குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு
இது குறித்து கருத்துத் தெரிவித்த நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் அதிகாரி: "நோர்வூட் இடுகாட்டுக்குச் செல்லும் வீதியில் பெரிய குழிகளைத் தோண்டி, அதனைச் சேதப்படுத்திவிட்டுச் சில நபர்கள் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக இரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில், நோர்வூட் பொலிஸாரின் உதவியுடன் விசேட பொலிஸ் குழுவொன்று குறித்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தது."
எனினும், அந்த நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு முன்னர், குறித்த சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தாங்கள் அகழ்வுப் பணியின்போது தோண்டி வெளியேற்றிய மண்ணைக் குழிகளில் மூடிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.