10 நிமிடம் தான் லஞ்ச் டைம்; மன அழுத்தம் ; 17 லட்சம் ரூபாய் வேலையை உதறித்தள்ளிய இளைஞர்..!
தாங்கமுடியாத மன அழுத்தம் காரணமாக , ஐஐடி டெல்லி பட்டதாரியான 24 வயது சிராக் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும் தனது வங்கி வேலையை, பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உதறி தள்ளிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இது குறித்த இளைஞனின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதீத வேலைப்பளு - ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள்
கார்ப்பரேட் பேங்கிங் துறையில் பணியாற்றி வந்த அவர், ஆரம்பத்தில் 9-5 என்று இருந்த வேலை நேரம், படிப்படியாக இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டதாகவும், வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் கொடுமையாக, மதிய உணவு இடைவேளை என்பது வெறும் 10 முதல் 15 நிமிடங்களாக குறைக்கப்பட்டதோடு, உடல்நல குறைவிற்காக விடுப்பு எடுப்பதற்கு கூட விரிவான விளக்கங்களை அளிக்க வேண்டிய நெருக்கடி இருந்துள்ளது.

மேலும், சுமார் 10 கோடி ரூபாய் வரையிலான விற்பனை இலக்குகளை எட்ட சொல்லி உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம், அவரது மனநலனை பாதித்துள்ளது. அதிக சம்பளம் தருவதால் ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான இளைஞனின் பதிவு , கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் அதீத வேலைப்பளு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு தொடர்பில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.