கிரைண்டரில் அரைத்து வீசப்பட்ட கணவனின் பாகங்கள் ; காட்டிக்கொடுத்த டாட்டூ ; குழந்தைகள் வாக்குமூலம் கொடுத்த ஷாக்
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில், தனது காதலனுடன் இணைந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைச் சிதைத்து அப்புறப்படுத்திய பெண்ணின் சதித்திட்டத்தை பொலிஸார் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 15ஆம் திகதி பட்ரூவா வீதியிலிருந்த ஒரு கறுப்பு நிறப் பைக்குள், சிதைந்த நிலையில் ஒரு ஆணின் உடலத்தை பொலிஸார் மீட்டனர்.

காட்டிக்கொடுத்த டாட்டூ
உடலத்தின் பாகங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்குச் சிதைக்கப்பட்டிருந்ததால், கொலையாளிகளைக் கண்டறிவதில் பொலிஸாருக்கு பெரும் சவால் ஏற்பட்டது. தடயவியல் சோதனையின் போது, உடலத்தின் கையில் ‘ராகுல்’ என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதை பொலிஸார் கவனித்தனர்.
இதனைத் தொடர்ந்து காணாமல் போனோர் பட்டியலைச் சரிபார்த்தபோது, நவம்பர் 24ஆம் திகதி ராகுல் என்பவரின் மனைவி தனது கணவரைக் காணவில்லை என அதே பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தது தெரியவந்தது.
அடையாளம் காண வரவழைக்கப்பட்ட அந்தப் பெண், உடலத்துடன் இருந்த துணிகள் தனது கணவருடையது அல்ல எனத் திட்டவட்டமாக மறுத்தார். மகளிடம் நடத்திய விசாரணையில் மூன்று பேர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாகவும், சில சமயங்களில் சாக்லேட்டுகளை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
எனினும், அந்தப் பெண்ணின் நடத்தை மற்றும் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், அவரது கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்தனர். அதில், கொலை செய்யப்பட்ட நபர் அணிந்திருந்த அதே டி-சேர்ட்டுடன் ஒரு ஆணுடன் அந்தப் பெண் இருக்கும் புகைப்படம் சிக்கியது.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குறித்த பெண் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலையை மறைக்க, உடலைச் சிறு துண்டுகளாக வெட்டியதுடன், சில பாகங்களைக் கிரைண்டரில் போட்டு அரைத்துப் பொலித்தீன் பைகளில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக உயிரிழந்த ராகுலின் மனைவி மற்றும் அவரது காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகுலின் தலை மற்றும் உடலின் ஏனைய பாகங்களை மீட்கும் பணியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.