தமிழர் பகுதி வைத்தியசாலையில் பரபரப்பு ; மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்த சுகாதார சிற்றூழியர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார சிற்றூழியர் ஒருவர் மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயடம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சத்திர சிகிச்சை பிரிவில் மலசல கூடத்தில் சிசுவை பிரசவித்து அதனை பெட்டி ஒன்றில் வைத்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்திருந்த அங்கு கடமையாற்றி வரும் 2 பிள்ளைகளின் தாயாரான 37 வயது சுகாதார சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் உயிரிழந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அவர் கடமையாற்றி கொண்டிருக்கும் போது அவருக்கு வயிறு வலிப்பதாக கூறி, அங்குள்ள மலசல கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஒருவருக்கும் தெரியாமல் பெண் சிசுவை பிரசவித்துள்ளார்.
அந்த சிசுவை பெட்டி ஒன்றில் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துவிட்டு அங்கு கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு இரத்த போக்கு அதிகரித்ததை அடுத்து அவரை அவதானித்த தாதியர் ஒருவர் அவரை வார்டில் அனுமதித்துள்ளார்.
அவரை சோதனை செய்த வைத்தியர்கள் அவர் குழந்தை பெற்றுள்ளதை கண்டறிந்து கொண்டனர்.
இதையடுத்து அப்பெண்ணிடம் விசாரணை செய்ததில், பெற்றெடுத்து குழந்தையை பெட்டி ஒன்றில் போட்டு மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த சிசு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிற்றூழியரின் கணவரும் அந்த வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வருவதாகவும் கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக கணவனை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையில் குறித்த பெண் கர்ப்பம் தரித்து முழுமையாக 38 வாரங்கள் கொண்ட 2 கிலோவும் 485 கிராம் நிறை கொண்ட பெண் குழந்தையை பிரசவித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது,
அப்பெண் கர்ப்பிணியாக இருப்பது அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எவருக்கும் தெரியாது.
இந்த நிலையில் அவர் குழந்தையை உயிருடன் பிரசவித்து பெட்டியில் போட்டு மறைத்து வைத்திருப்பதாகவும் கணவனுக்கு தான் அந்த குழந்தை பிறந்ததாகவும் கணவர் இரண்டாவது பிள்ளை தனக்கு பிறக்கவில்லை என அடிக்கடி தெரிவித்து வந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அப்பெண் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற அப்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை சிசுவின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என பிரிந்துள்ள கணவன் தெரிவித்ததையடுத்து குழந்தையின் மற்றும் தந்தையுடைய இரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ. பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.