துப்பாக்கியை காட்டி மிரட்டி பல கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த திருடன் கைது
துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் உட்பட பொருட்களை கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களுடன் அவர் தொடர்புடையவர் என்பதும், கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 100 கோடி ரூபாய் எனவும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தங்க நகைகளை கொள்ளை
2020 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி தொம்பே பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள், தங்க நகை அடகு கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, சுமார் 65 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களைக் தேடி விசாரணைகளைத் தொடங்கி நிலையில், அதன்படி தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் விசாரணை முன்னெடுத்ததில், கொள்ளையிடப்பட்ட பொருட்களை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில், 42 வயதுடைய மற்றொரு சந்தேக நபர் அதே நாளில் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
முதலாவது சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வேறு பல குற்றங்களில் ஈடுபட்டதை வெளிப்படுத்தினார். இந்த சந்தேக நபர் பெலியத்த பகுதியில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள நிலையில், தான் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அயலவர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு பகுதிகளுக்கு கொள்ளையடிக்கச் சென்றபோது, வர்த்தக நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதாகக் கூறியுள்ளார். அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை அவர் கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.