வெளிநாடு செல்ல அனுமதி கோரும் கோட்டாபய ராஜபக்ஷ ; CID-க்கு நீதிமன்றம் உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக, நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கோட்டை நீதவான் பஸான் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் சட்டக் குழுவினர் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, மேலதிக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டக் குழுவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி சனத் விஜயவர்தன தலைமையிலான சட்டக் குழுவினர் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சில முன்னாள் புலனாய்வு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலிப பீரிஸ், கோட்டாபய ராஜபக்ஷ இந்த விவகாரத்தில் இதுவரை உத்தியோகபூர்வமாகச் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், மனிதாபிமான அடிப்படையில் அவசியம் ஏற்படுமாயின், அவரது பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாகவும், பயணத் தடையை நீக்குமாறு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், அந்த மனுவைப் பரிசீலிக்க நீதிமன்றம் மறுத்திருந்தது. தற்போது, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான சமர்ப்பணங்கள் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.