டப்ளின் விமான நிலையத்தில் பாரபட்சம் ; ரயன்எயர் ஊழியர்கள் மீது குமார் சங்கக்கார குற்றச்சாட்டு
அயர்லாந்தின் டப்ளின் வானூர்தி நிலையத்தில் ரயன்எயர் (Ryanair) நிறுவனத்தின் தரைச் சேவை ஊழியர்கள் தன்னிடம் பாரபட்சமான முறையில் நடந்துகொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சமூக ஊடகமான X தளத்தில் பதிவிட்டுள்ள சங்கக்கார, டப்ளின் வானூர்தி நிலையத்தில் ரயன்எயர் நிறுவனத்தின் நுழைவாயில் ஊழியர்களால் ஏனைய பயணிகளும் இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டுள்ளனரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது குடும்பத்தினரிடம் ஊழியர்கள் நடந்துகொண்ட விதத்தையும் விமர்சித்துள்ள அவர், நடைமுறைகள் முறையாகக் கையாளப்படவில்லை என்றும், ஊழியர்களின் அணுகுமுறை அச்சுறுத்தும் வகையில் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எந்தவொரு பயணிக்கும் இவ்வாறான அனுபவம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ள அவர், டப்ளினில் தனக்கு ஏற்பட்ட முதல் மோசமான அனுபவம் இதுவெனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களையோ, ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டுக்கான காரணத்தையோ சங்கக்கார தனது பதிவில் குறிப்பிடவில்லை.
இதேவேளை, சங்கக்காரவின் பதிவுக்குப் பதிலளித்த இலங்கைத் தொழில்நுட்பத் தொழில்முனைவோரான சஞ்சீவ வீரவர்ண, மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த மற்றும் பயணித்த காலங்களில் தாமும் பாகுபாட்டை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.