ஹோமாகம பொலிஸ் காவலில் சந்தேகநபர் மரணம் ; தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்
ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கடமைகளைத் தவறவிட்டதாகக் கூறப்படும் ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளாரா அல்லது பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் பின்னரே அவரைப் பணி இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சந்தேகநபரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.