வீட்டுத் தோட்டத்தில் இராட்சத சரக்குக் கப்பல் ; தீவிர விசாரணையில் பொலிஸார்
நோர்வேயில் ஒருவருக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் இராட்சத சரக்குக் கப்பல் ஒன்று தரைதட்டி மோதிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
135 மீட்டர் (443 அடி) நீளமுள்ள அந்தக் கப்பல், வியாழக்கிழமை அதிகாலை 05:00 மணியளவில் ஜோஹன் ஹெல்பெர்க் என்பவரின் வீட்டை சில மீட்டர்கள் வித்தியாசத்தில் கடந்து சென்றுள்ளது.
ட்ரான்ட்ஹெய்முக்கு அருகிலுள்ள பைனெசெட் பகுதியில், கப்பல் கரைக்கு நேராக வருவதைக் கண்ட அவரது அண்டை வீட்டுக்காரர் பீதியடைந்து ஹெல்பெர்க்கை எச்சரித்துள்ளார்.
சைப்ரஸ் நாட்டுக்கு சொந்தமான NCL சால்டன் என்ற சரக்குக் கப்பலில் 16 பேர் இருந்துள்ளனர்.
இந்தக் கப்பல் ட்ரான்ட்ஹெய்ம் ஃபியோர்டு வழியாக தென்மேற்கு நோக்கி ஓர்காங்கர் சென்று கொண்டிருந்தபோது, வழித்தவறிச் சென்று விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை என்றும், நார்வே காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.