கலென்பிந்துனுவெவ சம்பவம் மற்றுமொரு மகளும் உயிரிழப்பு; தந்தையின் அவசரத்தால் சிதைந்த குடும்பம்
அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தந்தை வைத்த தீயில், ,படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மகளும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த சிறுமி இன்று (10) காலை உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் நால்வர் உயிரிழந்த துயரம்
கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி, படிக்காரமடுவ பிரதேசத்தில் கடந்த 06 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தீ வைத்த 43 வயதான குடும்பத் தலைவரும், அவரது 13 வயது மகளும் சம்பவ இடத்திலேயே தீயில் சிக்கி உயிரிழந்திருந்தனர்.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 36 வயதான மனைவியும் அன்றைய தினமே (06) உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து, தற்போது 15 வயதுடைய மூத்த மகளும் உயிரிழந்ததை அடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
இதேவேளை, தீ விபத்தில் சிக்கிய 20 வயதான மகனும், 66 வயதான மாமியாரும் தொடர்ந்தும் தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஒரே குடும்பத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.