தெய்வேந்திரமுனை விஷ்ணு ஊர்வல காவடி ஆட்டத்துக்கு அனுமதி
தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரையில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த ஆண்டு பெரஹரையில் பங்கேற்ற அனைத்து 45 காவடி நடனக் குழுக்களும் இம்முறை நடைபெறவுள்ள எசல பெரஹரையிலும் பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளன.
மேலும், நாளை நடைபெறவுள்ள பெரஹரையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில், காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரையும் மேலதிகமாக பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பெரஹரையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.