யாழில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்கள் ; கஜேந்திரகுமார் கடற்றொழில் அமைச்சரிடம் வேண்டுகோள்
யாழ் காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு கடற்றொழிலாளர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் கடத்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த இரு கடற்றொழிலாளர்கள் காணாமல் போய் ஆறு நாட்கள் கடக்கின்ற நிலையில் அவர்களின் குடும்பங்கள் மிகவும் வேதனையுடன் காணப்படுகிறார்கள்.

தமது கடற்றொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடற்படையினருக்கும் காவல்துறையினருக்கும் அமைச்சராகிய உங்களுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கி உள்ள நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் இதுவரை அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்காமை மன வருத்தத்தை தருகிறது.
கடலில் அவர்கள் திசைமாறி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்களை தாங்கள் கண்டதாகவும் இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன் துறை கடற்றொழிலாளர்களிடம் கூறிய ஒளிப்பதிவும் இருக்கின்ற நிலையில் நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்க முடியாத விடயம்.
ஆகவே கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பிலும் அவர்களின் குடும்பத்தின் நிலைமை தொடர்பிலும் கரிசனை கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.