மீன் கழிவால் உரம் தயாரிப்பு ; மக்களுக்கு துர்நாற்றம் பாதிப்பு
பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேலியகொட பொது சுகாதார பரிசோதகருக்கு கொழும்பு மேலதிக நீதவான் எச்.டி.டி.ஜே.பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மீன் சந்தைக்கு அருகில் மேற்கொள்ளப்படும் இந்த உரம் தயாரிக்கும் செயல்முறையினால் வெளியாகும் கடுமையான துர்நாற்றம், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் முன்னிலையான குறித்த தனியார் நிறுவனம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த துர்நாற்றம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே பரவுவதாகத் தெரிவித்தது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை அவதானித்த நீதவான், தனியார் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கை உட்பட அனைத்து ஆவணங்களையும் விரிவாக ஆராய்ந்து, இது தொடர்பான முழுமையான அறிக்கையை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளின் முடிவுகளை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் புலனாய்வு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.