இலங்கையில் அறுவை சிகிச்சைகளுக்காக 25,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு
இலங்கையின் அரச மருத்துவமனைகளில் 2 இருதய அறுவை சிகிச்சைகள், முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரச சுகாதாரத் துறையில் அதிகரித்து வரும் காத்திருப்புப் பட்டியல் நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அவர்களில் , சில இருதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் 2029ஆம் ஆண்டு வரை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவமனைகளில் நிலவும் காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலமாக சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகளில், தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவில் சிகிச்சை பெற முடியாத குறைந்த வருமானம் கொண்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தீர்வாக, ஜனாதிபதி நிதியத்தின் ஒதுக்கீடுகளை அதிகரித்து, அரச மருத்துவமனைகளில் காத்திருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட கட்டண அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தலாம் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அதேவேளை, அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேலதிக சேவைக்கான உரிய கொடுப்பனவுகளை வழங்கி, தினசரி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலத் தீர்வாக, சிறப்பு மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களின் போதுமான இருப்பை உறுதி செய்தல் அவசியம் என்றும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்