நுரைச்சோலை மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி தொகை புத்தளத்தை வந்தடைந்தது
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்திற்கான முதல் நிலக்கரி சரக்கு புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலக்கரி ஏற்றிச் சென்ற ‘IVS TRADER’ கப்பல் இன்று (04) புத்தளம் கடற்பரப்பை வந்தடைந்துள்ள நிலையில், நிலக்கரியை இறக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் தரப் பரிசோதனைகள் விரைவாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு மற்றும் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக இன்று (04) காலை மின் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது, அடுத்த சில நாட்களுக்கு மின் நிலையத்தை இயக்குவதற்குத் தேவையான அளவு நிலக்கரி கையிருப்பில் இருப்பதை அமைச்சர் அவதானித்துள்ளார்.
மேலும், மின் நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களை சந்தித்த அமைச்சர், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் மின்சார உற்பத்திக்காக அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதற்கு அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி விநியோகம் மற்றும் மின் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.