காணாமல் போன கடற்படை அதிகாரியின் உடல் என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்பு
அங்குலானைக் கடல் பகுதியில் கடற்படை டோரா கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல், இன்று (04) காலை கடற்படை நீர்மூழ்கிக் குழுவினரால் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
அங்குலானைக் கடற்பகுதிக்கு அப்பால் சுமார் மூன்று கடல் மைல் தொலைவில், கொழும்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, ஓகஸ்ட் 15ஆம் திகதி பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது.
கடற்படை, இலங்கை விமானப்படை, அங்குலானை பொலிஸார் மற்றும் உள்ளூர் மீனவ சமூகங்கள் இணைந்து மேற்கொண்ட கூட்டு மீட்புப் பணியின் மூலம், கப்பலில் பயணம் செய்த 12 கடற்படை வீரர்களில் 11 பேர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், கடல் மற்றும் நீருக்கடியில் நிலவிய சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் விசேட நீர்மூழ்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்ததைத் தொடர்ந்து, காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கடற்படை அதிகாரியின் சடலம் என சந்தேகிக்கப்படும் உடல் இன்று மீட்க்கப்பட்டது.
குறித்த படகு சுமார் 80 அடி ஆழத்தில் காணப்பட்டதுடன், நீருக்கடியில் பார்வைத்திறன் மிகவும் குறைவாக இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், படகின் உள்ளகப் பகுதிகள் மிகவும் குறுகலாக இருந்ததால், நீர்மூழ்கி வீரர்களுக்கு மீட்பு நடவடிக்கையின்போது கூடுதல் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போன அதிகாரியை மீட்பதே இலங்கை கடற்படையின் பிரதான முன்னுரிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன அதிகாரியைத் தேடும் நடவடிக்கைகள் பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்பு மற்றும் கரையோரப் பகுதிகளில் விரிவாக முன்னெடுக்கப்பட்டன.
தேடுதல் நடவடிக்கைக்கு ஆதரவாக இலங்கை விமானப்படை மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் கடற்படை ஒருங்கிணைந்து செயற்பட்டதுடன், கிடைக்கக்கூடிய கடல் மற்றும் வான்வழி வளங்களும் பயன்படுத்தப்பட்டன.
மேலும், சம்பவத்தின் முழுமையான பின்னணியை விரிவாகவும் தொழில்முறை ரீதியாகவும் கண்டறிவதற்கான விசாரணையை இலங்கை கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளது.