போதைப்பொருள் பாவனை; பாடசாலைகளில் கடும் சோதனை நடவடிக்கை !
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்காக, பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவி
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது, பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரைவுப் பரிசோதனை கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கான முன்மொழிவு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் முதலில் சந்தைகளில் கிடைக்கச் செய்யப்படுவதுடன், பின்னர் உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெற்றோர் மருத்துவ நிலையத்திற்குச் செல்லாமல், தங்களது பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பரிசோதனையை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.