தாயின் மடியில் தூங்கிய 2 வயது குழந்தை ; தரையில் அடித்துக் கொன்ற தந்தை
கேரள மாநிலம் மாவேலிக்கரையில், தாயின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தையைத் தூக்கித் தரையில் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான பரிதோஷ் மண்டல் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைக்கு அடிமை
இவரது மனைவி ரோண்ட் வாலி. இந்தத் தம்பதிக்கு இரண்டு வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. தொழில் நிமித்தம் கேரள மாநிலம் மாவேலிக்கரை பகுதிக்குச் சென்ற இவர்கள், அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த பரிதோஷ் மண்டல், தாயின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கியுள்ளார்.
இதன்போது, திடீரென குழந்தையைத் தரையில் ஓங்கி அடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குழந்தை அலறியதுடன், பின்னர் மயக்கமடைந்துள்ளது.
தந்தையின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அரச வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின்போது, தந்தையான பரிதோஷ் மண்டல் குழந்தையைத் தரையில் அடித்துத் தாக்கியமை தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் தந்தை தனது இரண்டு வயது மகளைக் கொன்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.